![]() |
மூல மூர்த்தியாக சிவலிங்கத்தைக் கொண்டு பிள்ளையாரை வழிபாடு செய்யும் திருத்தலங்கள் இந்த உலகிலேயே மிக அரியதாகவே காணப்படுகின்றன.இந்த வரிசையில் அற்புதங்கள் பல படைக்கும் புதுமையான திருத்தலமாக விளங்குவதுதான் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இயற்கை எழில் நிறைந்த வெற்றிலை செய்கைக்கு பெயர் பெற்ற,விவசாய நிலங்களை அதிகமாகக் கொண்ட செல்வச் செழிப்பு மிக்க புண்ணிய பூமியாக விளங்குகின்ற களுதாவளை பகுதியில் மூர்த்தி,தலம்,தீர்த்தம் என முறையே அமையப் பெற்று தம்மை நாடி வருகின்ற பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வமாக வீற்றிருக்கின்றார் களுதாவளைப் பிள்ளையார்.
ஆலயத்தின் தோற்றம் பற்றி நோக்குமிடத்து முன்னைய காலத்தில் வேடர்களின் வெற்றிலை சடங்கு செய்யும் இடமாக இவ்விடம் சிறப்பு பெற்றிருக்கின்றது.அதேபோன்று கதிர்காம யாத்திரை செய்வோர் தங்கி நின்று தமது கடமைகளை முடித்துச் செல்லும் ஒரு இடமாகவும் களுவை நகர் போற்றப்பட்டிருப்பதாக ஆலய வரலாறு பற்றி களுதேவாலய கல் வெட்டு சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறாக கதிர்காம யாத்திரை செல்ல வந்து தங்கி நின்று பூஜை முடித்து புறப்பட தயாரான போது சிறிய லிங்கம் ஒன்றை யாத்திரை செல்ல வந்த குருமார் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல முற்பட்ட போது அது நிலத்தின் அண்டம் நோக்கி சென்றிருக்கின்றது.அதனால் அந்த லிங்கத்தை கொண்டு செல்லும் முயற்சி கைவிடப்பட்டு ஊரவர் தகவலறிய அந்த இடத்தில் கொத்துப் பந்தல் அமைத்து வழிபடத் தொடங்கி இன்று கல்லால் ஆன ஆலயமாக அற்புத புகழ் பரப்பும் திருத்தலமாக களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம் புகழ்பெற்றிருக்கின்றது.
களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் அற்புதங்கள் பல நிகழ்த்தி அற்புத நாயகராக வீற்றிருக்கின்றார்.ஆலயத்திற்கு வரும் அடியவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது.களுதாவளை பிள்ளையாரை நாடி வரும் பக்தர்களுக்கு பிள்ளையாரின் அற்புத அருட் கடாட்சம் எப்போதும் கிடைக்கின்றது.
பிறப்பிலே வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு பேச பழக்குவிப்பவர்,நடக்க முடியாதவர்களுக்கு நடை பயிற்றுவிப்பவர்,குழந்தைப் பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு அந்த வரமும் வாரி வழங்குபவர்,எத்தகைய வியாதியாக இருந்தாலும் வைத்தியர்களால் கைவிடப்பட்ட பின்பு களுதாவளை பிள்ளையாரை நாடி வந்தவர்களுக்கு தங்களின் வாழ்க்கையில் சந்தோசம் உண்டாகிய வரலாறுகள் பல உண்டு.
இத்தகைய வரலாறுகள் கொண்ட களுதாவளை பிள்ளையாரின் அற்புத செயல்கள் நமது நாடு கடந்தும் வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் பலரும் அறிந்துள்ளனர்.பல வெளிநாட்டவரும் இந்த களுதாவளை பிள்ளையார் ஆலயத்துக்கு நேர்த்தி வைத்து அந்த நேர்த்திக் கடன் தீர்க்க ஆலயம் வருவதும் வழக்கம்.களுதாவளை பிள்ளையார் ஆலய வரலாறுகளை அறிந்து கொள்ள விரும்பினால் ஆலய இணையத்தளமான ஙிஙிஙி.ஓஅஃஐகூஏஅஙஅஃஅஐகஐஃஃஅஐஙுஅகீ.Nஉகூ என்ற இணையத்துக்குள் பிரவேசித்தால் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.10 தினங்கள் திருவிழா இடம்பெறுவது வழமை.கிராமத்தின் பாரம்பரிய வழக்கத்தின்படி 6 குடும்பங்கள் ஆலயத்திருவிழாவுக்கு கொண்டுள்ளனர்.1 ஆம்2 ஆம் திருவிழாக்கள் ஆலய நிருவாகத்தின் கீழ் நடத்தப்படுகின்றது 3 ஆம் நாள் திருவிழாவை வள்ளி நாயகி குடும்பமக்களும்,4 ஆம் நாள் திருவிழாவை செட்டி குடும்ப மக்களும்,5 ஆம் நாள் திருவிழாவை போற்றிநாய்ச்சி குடும்ப மக்களாலும், 6 ஆம் நாள் திருவிழாவை சுரக்காய் மூர்த்தி குடும்ப மக்களும் 7 ஆம் நாள் திருவிழாவை பேனாச்சி குடும்ப மக்களும் 8 ஆம் நாள் திருவிழா பெத்தாக்கிழவி குடும்ப மக்களாலும் நடத்தப்படுகின்றது.9 ஆம் நாள் திருவிழா அனைத்து குடும்பங்களும் இணைந்து ஆலய நிருவாகத்தினால் இறுதி நாள் திருவிழாவாக கொண்டாடப்படும்.அன்றைய நாளில் அன்னை பிதா உலகம் என்றதத்துவத்தை உலகுக்கு சொன்ன நாரதரின் விளையாட்டால் உண்டான மாம்பழ கதை நாடகம்,மூல மூர்த்திகளை வைத்துக் கொண்டே நடத்தப்படுகின்றது.இந்த நிகழ்வை மாம்பழத் திருவிழா என்று அழைக்கின்றனர்.இந்த நிகழ்வை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் ஆலயத்தை வந்தடைவர்.
இந்த மாம்பழத் திருவிழாவின் போது பல உண்மைத் தத்துவங்கள் வெளிப்படுத்தப்படும்.இதன் போது பயன்படுத்தப் படுகின்ற பூஜையில் இருக்கின்ற மாங்கனிகளை பெற்று உண்பதற்கு அடியார்கள் அலைமோதுவதையும் இங்கு காணலாம்.இந்த மாங்கனியானது பல குறைகளையும் நமது மானிட வாழ்க்கையில் இல்லாது செய்யும் சக்தி கொண்டவையாக பக்தர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறான மாம்பழத் திருவிழா நிறைவடைந்து மூல மூர்த்திகள் ஆலயத்துக்குள் சென்றதும் மறுநாள் காலை 10 ஆம் நாள் திருவிழாவாக தீர்த்தத் திருவிழாவுக்கான திருப்பொற் சுன்னம் இடித்தல் நிகழ்வுகள் ஆலயத்தில் ஆரம்பமாகும்.இதேநேரத்திலே பல வகையான காவடி எடுக்கும் பக்தர்கள் களுதாவளை கொம்புச் சந்தி அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் ஆலயம் நோக்கி காவடி எடுத்துச் செல்லத் தயாராவர்.
அவ்வாறாக காவடி எடுக்கும் பக்தர்கள் கொம்புச்சந்தி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு களுதாவளையின் பிரதான பாதையில் இருக்கும் கல்லடிப் பிள்ளையாரையும் தரிசித்து காவடிகள் ஆலயத்தை சென்றடைந்ததும் அதன் பின்னர் களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள தீர்த்த கங்கையில் நீராட விநாயகருடன் தனது தாய் தந்தையரான சிவன்,உமையுடனும் ,தம்பியான வள்ளி தெய்வானை சமேதரராய் முருகப் பெருமானும் எழுந்தருளுவார்.
இத்தகைய சிறப்புக்கள் மிக்க களுதாவளை பிள்ளையாரின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகிறது.கிரியைகளை பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.க.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் பல குருமார் நடத்துகின்றனர். இம்முறை திருவிழாக் காலங்களில் 10 தினங்களும் பகல்,இரவு வேளைகளில் அன்னதானம் வழங்க களுதாவளை கிராமத்தின் பொது மன்றங்கள் தயாராகியுள்ளன.ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை இலகு படுத்த பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment